சொந்தமாக சம்பாத்தியம்
இல்லாத போதும்
மகிழ்ச்சிக்கு பணம் தேவை
என எண்ணாத பருவம்...
கோப்பையில் அடைக்க படாத
எந்த நீரையும் குடித்து
தாகம் தீர்த்து கொண்ட
தூய்மையான பருவம்...
கோடை விடுமுறையில்
சுற்றுலா தலம் செல்லாமல்
வெயிலை வீணடிக்காமல்
ஆட்டம்போட்ட அற்புத பருவம்...
ஒரு ரூபாய்க்கு நெகிழியில் அடைத்த
வண்ண பெப்சி கோலாவை
ஐவர் பங்கிட்டு மகிழ்ந்த
கோலாகல பருவம்...
நமக்கு நாமே விதித்து கொண்ட
மட்டை பந்து, கால் பந்து விதிகளில்
உலகக் கோப்பையை வென்ற
பெருமிதம் அடைந்த பருவம்...
ஒரு ரூபாய்க்கு
ஐந்து பிஸ்கட் வாங்கி உண்டு
மகிழ்ச்சியில் திளைத்த
மகத்தான பருவம்...
மதம் சாதி பாராமல்
எந்த பண்டிகைக்கும்
நண்பன் வீட்டிற்கு சென்று, சொல்லாமல்
சமத்துவம் சொன்ன பருவம்...
தாய் தகப்பன்
ஊருக்கு செல்ல அழைக்கையில்
நண்பர்களை பிரிய மனமின்றி
அழுது கொண்டே சென்ற அழகான பருவம்...
நண்பன் முதுகில் ஏறி குதிக்கும்
பச்சை குதிரை ஆடிய போதும்
முதுகில் குத்தாமல்
அவனுடன் உண்மையாய்
தோளுடன் தோளாய் நின்ற பருவம்...
மரத்தில் பயமின்றி ஏறி
மாங்காய் பறித்து தோட்டக்காரன்
விரட்டிய போது கை கோர்த்து
ஒன்றாய் தப்பி ஓடி
சிரித்து கொண்ட ஒப்பற்ற பருவம்...
பருவங்கள் பல கடந்தும்
இன்றும் நீங்காமல் மனதில்
நிலைத்து நிற்பது அந்த
மகத்தான நினைவுகள்..
காலப் பயணம் சாத்தியம் ஆயின்
நான் விரும்புவது
மீண்டும் அந்த பருவத்திற்கு
பின் நோக்கி சென்று
அந்த பால்ய பருவத்திலேயே உறைய வேண்டும்...
No comments:
Post a Comment