Thursday, May 21, 2020

கொரோனா


மனிதன் குற்றஉணர்ச்சி இல்லாமால்
உலகை சுரண்டியது 
கொரோனாவுக்கு முன்பு
ஓரணு நுண்உயிரி மனிதனை
ஆட்டி படைப்பது
கொரோனாவுக்கு பின்பு

துளியும் பயமின்றி மனிதன்
அனைத்தையும் திருடி அழித்தது 
கொரோனாவுக்கு முன்பு
நித்தமும் மனிதனை பயத்தில் ஒரு
ஓருயிரி கட்டி வைத்தது
கொரோனாவுக்கு பின்பு

மிருகத்தில் இருந்து நோய் பரவினால்
அதனை கொன்று குவித்தது
கொரோனாவுக்கு முன்பு
மனிதன் தொட்டு பரவுவதால்
வீட்டில் கட்டுப்பட்டு இருப்பது
கொரோனாவுக்கு பின்பு

எந்த நேரம் ஆனாலும் மனிதன்
கட்டுப்பாடின்றி சுற்றியது
கொரோனாவுக்கு முன்பு
ஊரடங்கு சட்டம் வந்ததால் வீட்டில்
கதவடைத்து இருப்பது
கொரோனாவுக்கு பின்பு

கழிவுகளை எல்லாம் நீரில் கலந்து
ஆறு-குளங்கள் கெடுத்தது
கொரோனாவுக்கு முன்பு
தனிமைபட்டு வீட்டில் இருந்ததால் அவை
இயற்கையாகவே சீரமைந்தது
கொரோனாவுக்கு பின்பு

மீன்கள் எல்லாம் மாண்டு பறவைகள்
உணவின்றி தவித்தது
கொரோனாவுக்கு முன்பு
மனிதநடமாட்டம் குறைந்ததால் வெளிநாட்டிலிருந்தும்
பறவைகள் வந்தது
கொரோனாவுக்கு பின்பு

குடும்பத்தினர் வார இறுதியில் மட்டும்
ஒருவரையருவர் கண்டது
கொரோனாவுக்கு முன்பு
வாரத்தில் அனைத்து நாட்களும்
குடும்பமாய் கூடி இருப்பது
கொரோனாவுக்கு பின்பு

வெளியில் உணவு உண்பது பெருமை
என மார்தட்டியது
கொரோனாவுக்கு முன்பு
உணவகங்கள் இன்றி வீட்டில்
சமைத்து உண்ணுவது
கொரோனாவுக்கு பின்பு

கைபேசியில் தனித்தனியே
விளையாடி வென்றது
கொரோனாவுக்கு முன்பு
குடும்பம் கூடி மறந்த விளையாட்டை
ஒன்றாக விளையாடியது
கொரோனாவுக்கு பின்பு

பப்ஜி ஆடி புள்ளிகள் குவித்து
பெருமை கொண்டது
கொரோனாவுக்கு முன்பு
பல்லாங்குழி ஆடி புத்தியின்
கூர்மையை தீட்டியது
கொரோனாவுக்கு பின்பு

பிள்ளைகள் உறங்கியபின் அலுவல்
விட்டு வீடு திரும்பியது
கொரோனாவுக்கு முன்பு
பிள்ளைகள் ஊடே வீட்டிலேயே அலுவல்
வேலையும் செய்வது
கொரோனாவுக்கு பின்பு

தேவையற்ற பொருட்களை பகட்டாக
வாங்கி குவித்தது
கொரோனாவுக்கு முன்பு
தேவையான பொருளையும் திட்டமிட்டு
வரிசையில் நின்று வாங்குவது
கொரோனாவுக்கு பின்பு

நெடுந்தொடரில் மூழ்கி மதி
மயங்கி இருந்தது
கொரோனாவுக்கு முன்பு
நெடுந்தொடர் ஏது மின்றி நல்லிசை
கேட்டு மகிழ்வது
கொரோனாவுக்கு பின்பு

மதுகடைகளும் மது கூடங்களும்
நித்தமும் ஊரை கெடுத்தது
கொரோனாவுக்கு முன்பு
வரலாற்றி‌ல் காணாத வகையில் அவைகளும் மூடுவிழா கண்டது 
கொரோனாவுக்கு பின்பு

இருப்பதை விட்டு பறப்பதை கண்டு
தலைதெறிக்க ஓடியது
கொரோனாவுக்கு முன்பு
இருப்பதில் மகிழ்வாய் வாழமுடியும்
என்ற உண்மை உணர்ந்தது
கொரோனாவுக்கு பின்பு

வண்டியில் வந்து தெருநாய்கள்
பிடித்ததை மனிதன் கண்டது
கொரோனாவுக்கு முன்பு
சமூகவிலகல் பின்பற்றாமல் வண்டியில்
மனிதனை அழைத்து செல்வது
கொரோனாவுக்கு பின்பு

நாடு விட்டு நாடு சுற்றுலா
சென்று வந்தது
கொரோனாவுக்கு முன்பு
ஊர் விட்டு ஊர் செல்லவும்
தடைகள் போட்டது
கொரோனாவுக்கு பின்பு

கைகள் கொடுத்து குலுக்கி
கட்டித்தழுவி வரவேற்றது
கொரோனாவுக்கு முன்பு
கைகள் இரண்டும் கூப்பி
மனதார வரவேற்பது
கொரோனாவுக்கு பின்பு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என சொல்லி வாழ்ந்தது
கொரோனாவுக்கு முன்பு
உடலால் தனித்து மனதால் இணைவோம்
என்று கூறி வாழ்வது
கொரோனாவுக்கு பின்பு

அன்றாட பல வேலைகள் செய்து
ஊதியம் ஈட்டி வாழ்ந்தது
கொரோனாவுக்கு முன்பு
அனைத்தும் அடைத்து தின கூலி
இன்றி பரிதவிப்பது
கொரோனாவுக்கு பின்பு

பருவகாலத்தை கணக்கிட்டு
பயிரிட்டு அறுவடை செய்தது
கொரோனாவுக்கு முன்பு
பயிரிட்ட பயிரை சந்தைப்‌படுத்த
முடியாமல் விவசாயிகள் தவிப்பது
கொரோனாவுக்கு பின்பு

பொருளாதார கணக்குகள் கணக்கிட்டு
முதலீடுகள் பல செய்தது
கொரோனா வுக்கு முன்பு
பொருளாதார போக்கு தெரியாமல்
இருப்பதை காத்துக்கொள்ள நினைப்பது
கொரோனாவுக்கு பின்பு

பல போர்கள் பல சோதனைகள்
கண்டு அதை வெற்றி கண்டது
கொரோனாவுக்கு முன்பு
உலகையழித்த நுண்உயிரியை அடியோடு
வென்றோம் என வரலாறு கூறும்
கொரோனாவுக்கு பின்பு

விடியாத இரவு என்று எதுவும் இல்லை
இறவாத உயிர் என்று எதுவும் இல்லை
கொரோனாவும் இதற்கு விதி விலக்கு இல்லை
இந்த நிலையும் கடந்து போகும்
நல்ல பொழுது நம்மை வந்து சேரும்
மனதால் இணைவோம்!!!!

நன்றி


No comments:

Post a Comment