Tuesday, May 26, 2020

அவள் தான் பெண்




ஆண்கள் வாழ்வில் 
முடிசூடா ராணி அவள். 
பருவம் அடைந்த போதும் 
தந்தைக்கு ஒரு பதின் வயது 
தாயாக இருப்பவ‌‌ள் அவள். 
தன் மூலம் உலகிற்கு வந்த போதும் 
தன் தாயை நினைவு படுத்தும் 
செல்ல மகள் அவள்!!! 

தொட்டதற்கு எல்லாம் சண்டை இடும் 
அழகிய பிசாசு அவள். 
துன்பத்தில் இருக்கும் போது தோள் 
கொடுக்கும் தோழி அவள். 
அம்மா இல்லாத போது கனிவாக 
கவனிக்கும் தாய் ஆனவள் அவள். 
வாழ்க்கை பட்டு செல்லும் போது 
கண்ணில் நீர் துளியுடன் 
வெறுமையை தந்து செல்லும் 
அழகிய சகோதரி அவள்!!! 

வளர்ந்த வீட்டை விட்டு, 
உறவை விட்டு கட்டியவர் ஒன்றே 
வாழ்க்கை என வந்தவள் அவள். 
விடியல் முன் எழுந்து வீட்டின் 
அனைத்து பணியும் சிறப்பாய் செய்யும்
வீட்டின் தென்றல் அவள். 
புகுந்த வீட்டின் தேவை அறிந்து 
சேவை பல புரிந்து 
அவனில் பாதி இவள் என 
வாழும் துணைவி அவள் !!! 

தங்கள் காதலின் சாட்சியாய் 
உருவான உயிரை இவ்வுலகிற்கு 
கொண்டு வருவதற்கு நித்தம் பல 
துன்பங்களையும் இன்பமாய் 
எதிர்கொள்பவள் அவள். 
தன் தேவையை விடுத்து 
தன் சேயின் தேவை அறிந்து 
உயிராய் கலந்தவள் அவள். 
பல இரவு தன் தூக்கம் விட்டு 
பிள்ளையை காத்து வளர்க்கும் 
மனிதகுல தெய்வம் அவள். 
மூப்பு எய்த போதும் ஒவ்வொரு 
மகனின், மகளின் உலக அழகி 
ஆகச்சிறந்த தாய் அவள்!!! 

அலுவலகம் சென்று 
குடும்பத்திற்கு உழைக்கும் 
கணவனுக்கு சரி நிகராய் 
அலுவலகத்திலும் வீட்டிலும் 
சளைக்காமல் உழைப்பவள் அவள். 
நித்தம் பல தடைகள் கண்டபோதும்
தடைகள் பல கடந்து 
திறம்பட உயர்பவள் அவள். 
சமூகத்தில் பதினைந்தாலோ, 
ஐம்பத்தி ஐந்தாலோ  சில வேளையில் 
வேட்டையாடப் பட்டாலும் நிமிர்ந்த 
நன்நடையுடன் முன்னேறும் 
புதுமைப்பெண் அவள்!!! 

பூமியில் மட்டுமின்றி 
விண்ணிலும் கால்தடம் பதித்து 
பூமியை பூப்பந்தாக்கி 
விளையாடும் வீராங்கனை அவள். 
பருவத்தில் வளையலை தேடியவள்
 இன்று வலைதளத்தில் அறிவியல் 
தேடும் அறிவினாள் அவள். 
பொறுமை எனும் அரிய 
ஆயுதம் கொண்டு பெருமைகள் பல 
பெற்றவள் அவள். 
வறுமை வந்து வாட்டும் போதும் 
சிறுமை நாடா தன்மான 
சிங்கப்பெண் அவள்!!! 

மனிதகுலம் தழைத்து ஓங்க 
உலகின் சக்தியாக, 
பொறுமையின் வடிவாக, 
அறியாமை என்ற இருள் அகற்றி, 
வரும் சந்ததிகள் ஒளிர்ந்து மின்ன 
என்றும் காரணியாய் இருக்கும் 
மாசற்ற மாணிக்கம் அவள்!!! 

பெண் தெய்வங்கள் அனைவருக்கும் 
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!!


No comments:

Post a Comment