Thursday, May 21, 2020

நீர்


ஜல வாயுவின் இரு மூலகூறுக்கும், 
பிராண வாயுவின் ஒரு மூல கூறுக்கும், 
ஏற்பட்ட கலப்பு திருமணத்தில் 
பிறந்த குழந்தை நீர் !!!

எரிமலை பெரு வெடிப்பின் வெப்பத்தில் 
மேகதுடன் ஏற்பட்ட கலப்பில்
மழை மேகத்தின் பலவருட பிரசவத்தில் 
பூமிக்கு வந்தவள் நீர் !!!

உன் அரவணைப்பில் பூமியில் 
தோன்றிய உயிர்கள் எத்தனையோ
நீரின்றி அமையாது உலகு என்ற 
சொல்லின் உண்மை நீர்!!! 

பசுமை பூத்த காடுகளும், 
ஓங்கி வளர்ந்த மரங்களும் 
பூத்து குலுங்கும் பூக்களும் 
ஓரணு உயிரி முதல் மனிதன் வரை 
இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் 
யாவர்க்கும் தாய் நீர் !!! 

உந்தன் வடிவங்கள் தான் எத்தனை 
மூன்றில் ஒரு பங்கு கடலாக 
ஊரின் அன்றாட தேவைக்கு ஊருணியாக 
உன்னை வெட்டி எடுத்து அருந்தும் கிணறாக 
குலமக்கள் தேவை பூர்த்திக்கு குளமாக 
மழைநீர் தேக்கி வைக்கும் குட்டையாக 
மிகையான நீரை தேக்கி வைக்கும் ஏரியாக 
தாழ்பகுதிக்கும் குடை அளிக்கும் ஆறாக 
அனைவரையும் என்றும் வாழ்விக்கும் 
அமுதசுரபி நீர் !!!  

கலங்காத தெளிந்த நீரோடை நீர் - 
ஆனால் கோவம் கொண்டால் 
ஊரையே அழிக்கும் காட்டாறு நீர்!!! 
உலகின் பரம்பொருள் ஈசன் அவன் 
சிரசில் சூடிய கங்கை நீர்!!! 

உன்னை கட்டி அணைக்க முடியாததால் 
அணைகட்டி உன்னை தேக்கி வைத்து 
உன் சமரசத்தின் மூலம் உருவாக்கிய 
மின்சாரத்தின் சாரம் நீர் !!! 

மனிதரின் சரீரத்தில் அறுபது பங்கு நீர் 
அமிழ்து என்பதற்க்கு ஏற்றபடி உமிழ் நீராக  
உழைப்பின் உயர்வால் வரும் வியர்வை நீராக
உண்ட உணவை செரிக்கும் பித்த நீராக 
கர்ப்பத்தில் சிசுவை தாங்கும் பனிக்குட நீராக 
மூளை செயல்பாட்டின் மூலக் கூராக
இவ்வாறு மனிதனுடன் பல வகையில் 
பின்னிப் பிணைந்த அற்புதம் நீர் !!! 

ஊர் சிறக்க உள்ள ஏரியில் உன் 
பை பெருக்க அதை கொல்லும் மனிதா 
நீர்மகள் சினம் கொண்டால் உன் 
அஸ்தி கூட மிஞ்சாது என்பதை அறிவாயா நீர்??? 

குலத்தை காக்க வெட்டிய குளத்தை 
மூடி அதன்மேல் 
அடுக்கு மாடியை கட்டும் மானிடா 
குளத்தை அழித்தால் உன் குலத்தை 
அழிக்கும் என்பதை அறிவாயா நீர்??? 

நீர் மேலாண்மை மறந்த மனிதா 
வேளாண்மைக்கு கூட நீரில்லா அவலம் 
அதற்கு உன் பேராசை தான் காரணம் 
என்பதை உணர்ந்தாயோ நீர்??? 

சதுப்பு நிலத்தில் குப்பைகளை நிரப்பி
நிலத்தை பாழ் செய்த மனிதா 
மழைவெள்ளம் ஊர் புகுந்து தாண்டவம் 
ஆடும் நிலையை உணர்ந்தாயோ நீர்??? 

பணத்தை தண்ணி போல் செலவழிக்க 
தயக்கம் காட்டும் மனிதா 
தண்ணியையே இனி பணத்தை போல 
செலவழிக்க பழக காற்றாயோ நீர்??? 

பஞ்சபூதத்தில் குளிர்ச்சி நீர் 
உயிர்கள் வளர்ச்சியின் ஆதாரம் நீர் 
நம் அனைவரின் தேவைக்கும் அடிப்படை நீர் 
வாழ்க்கை வாழ முக்கிய தேவை நீர் 
உழவுக்கு தேவை நீர் 
உடலுக்கும் தேவை நீர் 
நம் தாகம் தணிக்கும் அமுதம் நீர் 
இதை உணராவிட்டால் வாழ்வில் என்றும் கண்(நீர்)ணீர் !!! 

நீர் காப்போம்!!!! பார்* காப்போம்!!!!

ந‌ன்றி!!! 


*பார் - உலகம் 

No comments:

Post a Comment