Thursday, May 21, 2020

கவிதை


மொழி எழுத்து கருத்து கற்பனை
நயம் எதுகை-மோனை ஆகியவற்றோடு
உணர்வுகளையும் சேர்த்து பரிமாறும்
மொத்த கூட்டின் கலவையே
இந்த எழுத்து வழி கவிதை.

வாழ்க்கை என்பதே ஒரு கவிதை
அதில் ஓவ்வொரு நிகழ்வும் ஒரு அழகிய கவிதை

காதலர்களின் கண்களும் பார்வையும்
சிரிப்பும் காதல் சொட்டும் வார்த்தையும்
அணைப்பும் தவிப்பும் தொலைவும்
பிரிவும் தரும் காதல் அந்த
காதலர்க்கு ஒரு அழகிய கவிதை

ஊர் கூடி வாழ்த்து கூறி சுற்றம்
சொந்த பந்தங்கள் யாவரும் கூடி
தேவர்கள் ஆசியுடன் திருமண பந்தத்தில்
நுழையும் தம்பதியர் வாழப்போகும் அந்த
தாம்பத்யம் ஒரு அழகிய கவிதை

இணைந்த தம்பதியர் சில வருடங்கள்
கடந்தும் வாரிசு இல்லாமல் ஊரார் ஏச்சுக்கும்
பேச்சுக்கும் ஆளாகி அவற்றை கடந்து சென்று
பின்னர் அழகிய சுடராக உருவாகும் கரு அந்த
தம்பதியருக்கு ஒரு அழகிய கவிதை

கருவுற்ற தாய் மசக்கை அடைந்து
உணவு தூக்கம் மறந்து வீட்டையும் ஆண்டு
குடும்ப சுமையையும் தாங்கி அக்கருவின்
அசைவில் மகிழ்ந்து அவள் பெற்றெடுக்கும் அந்த
குழந்தை ஒரு அழகிய கவிதை

பிறந்த குழந்தையின் பசி தூக்கம் வலி
அறிந்து பாலூட்டி சீராட்டி பாராட்டி
அதன் சிரிப்பில் உலகை மறந்து
அக்குழந்தையை நேசிக்கும் முதல் பெண்ணான அந்த
தாய் ஒரு அழகிய கவிதை.

குடும்பத்திற்கு உழைத்து இன்னல்கள் கண்டபோதும்
அக்குழந்தையின் சிரிப்பில் அனைத்தும் மறந்து
அணைத்து கொஞ்சி மகிழ்ந்து கைபற்றி நடை பழகி
இரவில் தோளில் சாய்த்து தூக்கம் துறக்கும் அந்த
தந்தை ஒரு அழகிய கவிதை

உருண்டு தவழ்ந்து தத்தி தத்தி நடந்து
குறும்புகள் பல செய்து வீட்டில் சுட்டியாய்
மழலை மொழி பேசி குறும்பு மிரட்டல் காட்டி
ஆண்மகனும் தாய்மையை உணரும் அந்த
உணர்வு ஒரு அழகிய கவிதை

சூழ்நிலையால் வெளிநாடு செல்லும் குடும்பத்தலைவன்
வருடங்கள் சில கடந்து விடுப்பு கிடைத்து
சொந்த ஊர் வந்து மனைவி பிள்ளைகள்
காணும் பொது அனைவரும் அடையும் அந்த
பேரானந்தம் ஒரு அழகிய கவிதை

குறும்பாய் விளையாடிய மகள் காலஓட்டத்தில்
வளர்ந்து பருவம் அடைந்து பழக்கத்திலும்
சில மாற்றங்கள் அடைந்து ஒரு மங்கையாக
தான் பெற்ற மகளிடம் தாயை காணும் அந்த
தந்தை-மகள் உறவு ஒரு அழகிய கவிதை

இத்தனை நாட்கள் இந்த வீட்டில் செல்ல ராணியாக
குறும்புக்காரியாக தங்கை என்ற அழகிய ராட்சசியாக
குடும்ப விளக்காக இருந்தவள் மணமுடித்து புகுந்தவீடு
செல்லும் நேரம் கண்ணின் ஓரம் ஊற்றெடுக்கும் அந்த
கண்ணீர்த்துளி ஒரு அழகிய கவிதை

கடமைகள் யாவும் முடித்து ஓய்வு பெற்று
நரை கண்டு பெரும்பருவம் அடைந்து
இத்தனை வருடங்கள் தன்னோடு பயணித்த இணையிடம்
தோழமை கலந்த காதலுடன் வாழும் அந்த
முதிர்பருவம் ஒரு அழகிய கவிதை.

வாழ்வின் ஓவ்வொரு நொடியிலும் பலப்பல கவிதைகள்
அவை ஓவ்வொன்றும் ஓவ்வொரு கவிதைகள்
சில இந்த மண்ணின் கவிதைகள்
சில இந்த மானுடத்திற்கான கவிதைகள்
மானுடம் தழைக்கும் வாழ்க்கை வாழும் ஓவ்வொரு மனிதரின்
வாழ்வுமே ஒரு அழகிய கவிதை !!!!!

நன்றி !!!!! 

No comments:

Post a Comment