Thursday, May 21, 2020

கைபேசி


விளக்கினுள் பூதம் வெளிப்பட்டதை போல
ஒரு கருவியில் உலகையே அடக்கி தந்த
நவீன அற்புத விளக்கு (கருவி) இந்த கைபேசி !
கைக்கு அடக்கமாக பேச உண்டாக்கிய கருவி – இன்று
உலகில் காலங்காலமாக இருந்த பல விடயங்களுக்கு
மாற்றாக அமைந்த கைபேசி !

குடும்பம் பிரிந்து திரைகடல் ஓடி
வேலை செய்யும் கணவன் பிரிந்த குடும்பத்தின்
கடிதம் காண நாட்கள் பல காத்திருந்தது அன்று !
ஒரு செயலி மூலம் அனைவரின்
முகம் பார்த்து பேசி மகிழும்
நெருக்கம் தந்தது கைபேசி இன்று !!

நண்பர்கள் கூடுகைக்கு ஒவ்வொரு இடத்தினின்றும்
வரும் நண்பர்களில் யாரேனும் ஏதோ ஒரு காரணத்தால்
பயணத்தடை ஏற்பட்டு அது தெரிய
சில நாட்கள் காத்திருந்தது அன்று !
ஒரு விசையின் மூலமாக அவர் இருப்பிடம் உடனே
அறிய செய்தது கைபேசி இன்று !!

வீட்டுப்பாடம் செய்து முடிக்க நூலகம் சென்று
இரண்டு புத்தகங்கள் எடுத்து பின்னர்
அதன் குறிப்பு எடுத்தது அன்று !
இணையத்தில் நொடியில் தேடி பல புத்தகத்தின்
சாரம் கண்டு தெளிவு பெற உதவிய
கையடக்க நூலகம் தந்தது கைபேசி இன்று !!

அலுவலக நிமித்தம் ஊரூராக சென்று 
சந்திப்புகள் நடத்தி பணிகள் மேற்கொண்டு
பணம் கால விரயம் கண்டது அன்று !
செயலி மூலம் கண்டு பேசி மின்னஞ்சல் மூலம்
பணியை பயணமின்றி முடிக்கும்
வசதியை தந்தது கைபேசி இன்று !!

நாடு கடந்து தொழில் செய்து
மாதக்கணக்கில் நேரம் பிடித்தது அன்று !
நொடிப்பொழுதில் அவற்றை நிகழ்த்திக்காட்டி
தொழில் துறையில் புதுப் போக்கையும்
புதிய தகவல் புரட்சியையும்
உண்டாக்கியது கைபேசி இன்று !!

கடிதம் மூலம் காதலித்து
பொது தொலைபேசியில் வரிசையில் நின்று
சில நிமிடம் பேசிய காதலர்கள் அன்று !
மணிகணக்கில் நேரம் காலம் கட்டுப்பாடு இன்றி
நினைத்த மாத்திரம் பேசும் காதலர்கள்
நெருக்கம் கொடுத்தது கைபேசி இன்று !!

எண்ணற்ற நன்மைகள் கூறிய போதும்
கைபேசியால் நாம் இழந்த சின்ன சின்ன
மகிழ்ச்சியும் இந்த கருவியால் உண்டு

தொலைவு ஏற்படுத்தும் நெருக்கத்தை முற்றிலும் நெறித்ததும்
புத்தகம் கொடுக்கும் ஸ்பரிசத்தை சம்ஹாரம் செய்ததும்
பண்டிகை கால வாழ்த்து மடல் மற்றும்
வாழ்த்து அட்டை தரும் மகிவை ஒழித்ததும்
இரவில் உறக்கம் தவிர்த்து ஆந்தைக்கு துணையாக செய்ததும்
வீட்டு நிகழ்வுக்கு கூட வாராமல் உறவின் நெருக்கம் குறைத்ததும்
குடும்பமே ஒன்றாக பேசி மகிழும் அன்யோன்னியம் கெடுத்ததும்
பல சொந்தங்களை காண்பதை நம்மை மறக்க செய்ததும்
இவ்வாறு நாம் இழந்தவைகள் ஏராளம் !!!

இருந்த இடத்தில வேலையை முடிக்கும்
வசதியை அரவணைத்த நாம் - ஆனால்
நேரில் சென்று சொந்தங்களைக் காணும்
சந்தோஷத்தையும் இருந்த இடத்தில் இருந்தே
அடைய நினைப்பது மூடத்தனம் !!!

காதலர்கள் கரம்பற்றி காதலுடன்
ஒரு நிமிடம் பேசி அடையும் இன்பம்
குறுஞ்செய்தியில் ஒரு நாள் பேசியும்
இல்லாமல் போவதே நமக்கு
சிறுக தந்து பெறுக மகிழ்விக்கும்
வாழ்வின் முக்கிய தத்துவம் !!!

நேரில் சென்று பெற்றோரிடம் நாம்
செலவிடும் அந்த ஒரு நிமிடம்
அவர்களுக்கு தரும் திருப்தியை - இந்த
தொழில்நுட்பம் பல மணிநேரத்தில் தருவதில்லை
என்பதே வாழ்வில் நாம் தவறாமல்
அறிய வேண்டிய நிதர்சனமான உண்மை !!!

உறவுகள் என்பதே உயிர்ப்பித்து இருப்பது
நாமும் - நம்மால் மற்றவரும் !
அந்த உயிர்ப்பித்து இருக்கும் மகிழ்வை இன்றல்ல
எந்த நாளிலும் கைபேசியோ வேறு எந்த
தொழில்நுட்பமோ தர இயலாது !!!

நாம் தொழில்நுட்ப வித்தகர் ஆனபோதிலும்
மனித உறவுகளோடு உயிர்ப்பித்து இருக்கும்
பண்பையும் பயில்வோமேயானால்
நாளைய காலம் நற்காலம்
நமக்கு என்றும் அமையும் பொற்காலம் !!!

நன்றி!!!! 


No comments:

Post a Comment