இளமை என்பது அற்புதம் - ஆனால்
முதுமை என்பது ஒரு வரம்
காலத்தின் ஓட்டத்தில் சூறாவளியாய் சுழன்று
இந்த இயந்திர வாழ்வில் இருந்து - இன்று
தனக்கான நியாயமான ஆசைகளை வயதிற்கேற்ற விருப்பங்களை
நோக்கி செல்லும் பருவம் !!!
ஒருவேளை உணவை கூட சரியாக உண்ணாமல்
பொருள் ஈட்டும் பொருட்டு பம்பரமாய் சுற்றியவர் - இன்று
தனக்கென பொறுமையாக தன்னை தானே கவனித்துக்கொள்ளும்
சுயாதீனமான* பருவம் !!!
இத்தனை வருடம் தான் கற்றவற்றை கொண்டு
திறம்பட செயல்கள் பல செய்து – இன்று
காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னைத்தானே
மீண்டும் தகவமைக்கும்* பருவம் !!!
கால ஓட்டத்தில் கவனிக்க தவறிய பலவற்றை
வாழ்வின் மிச்சத்தில் பொறுமையாக – மேலும்
கவனமாக நல்ல முறையில் புதிய கண்ணோட்டத்தில்
உலகை அணுகவைக்கும் பருவம் !!!
பிறர் தவறை பெரிது படுத்தி பேசி
பலர் மனதை நோகச் செய்து - இப்போது
தவரையும் நயமாக அணுகி லயமாக சுட்டிக்காட்டி
தீர்வை அணுகும் பருவம் !!!
தான் பெற்ற பிள்ளையுடன் கூட நேரம்
ஒதுக்க முடியாமல் போன தருணம் – இன்று
தன் பிள்ளையின் பிள்ளையுடன் குழந்தையாய் மாறும்
குழந்தைத்தன்மை காட்டும் பருவம் !!!
முதலாம் தலைமுறை தொழில்நுட்பம் உதவி
கொண்டு தன் தொழிலை புரிந்து – இன்று
தன் பேரப்பிள்ளைகள் மூலம் இன்றைய தலைமுறையின்
தொழில்நுட்பம் கற்கும் பருவம் !!!
கண்டிப்புகள் பல காட்டி, துல்லியம் என்ற
அளவுகோலை அளந்த மனது – இன்று
துல்லியம் அவரவர் மனதை பொறுத்தது என்று
வாழ்வை உணரும் பருவம் !!!
காலத்தின் சுழற்சியில் காதோரம் நரைக்கும்
முடியை மை பூசிய கைகள் – இன்று
நரை என்பது அனுபவத்தின் குறியீடு என்று
தெளிவு காணும் பருவம் !!!
மன அழுத்தத்தில் எரிச்சலுடன் மனைவி மற்றும்
குழந்தைகளை கையாண்ட மனது – இன்று
தன்னுடன் இத்தனை ஆண்டுகள் பயணித்த உற்ற துணையை
வாஞ்சையோடு பார்க்கும் பருவம் !!!
வாழ்வின் ஓட்டத்தில் பல சூறாவளியை, பல
காட்டு வெள்ளத்தை கடந்து வந்து – இன்றுவரை
மூழ்காமல் அதையெல்லாம் தாண்டி, எதிர்நீச்சல் இட்டு வாழ்வின்
பெட்டகமாய் விளங்கும் பருவம் !!!
உடலை வருத்தி குடும்பத்திற்கு ஓடாய் தேய்ந்து
வாழ்வை கடந்து வந்து – இன்று
உடலில் தளர்ச்சி,நோய் வந்து தாக்கிய போதும்
உள்ளத்தால் தளராத பருவம் !!!
வருடங்கள் பல கடந்து அலுவலக
விதிப்படி ஓய்வு பெற்ற போதும் – இன்றும்
மனதிற்கு ஓய்வு அளிக்காமல் மன வலிமையுடன்
புதியபாதை காணும் பருவம் !!!
மெல்லிய உடலும் அழகிய தோலும் அழகு
என்று கொண்டாடிய மனது – இன்று
சுருக்கத்தின் ஈடே உள்ள அழகையும் சிரிப்பையும்
ஸ்ரிங்கார ரசமாய் ரசிக்கும் பருவம் !!!
குழந்தைக்கு குழந்தையாக
வல்லுநர்க்கு வல்லுநராக
முதியவர்க்கு முதியவராக
தனித்தோர்க்கு ஆதரவாக
எந்த வயதினருக்கும் தோழராக
வாழ்வில் நம்பிக்கை கொண்டவராக வாழ்பவரை,
எந்த தலைமுறையோ, காலமோ ஆட்கொள்வதில்லை !!!
முதியவர்கள் -
பூமிக்கு பாரமல்ல அவர்கள் தலைமுறையின் பாலங்கள்
சுணங்கியவர்கள் அல்ல அவர்கள் உலகின் சமகால சரித்திரங்கள்
தள்ளாமை கொண்டவர்கள் அல்ல தவறக்கூடிய இவ்வாழ்வின் நங்கூரங்கள்
குழந்தைகள் அல்ல அவர்கள் குழந்தை தன்மை கொண்டவர்கள்
தன்னை மறந்தவர்கள் அல்ல நாம் மறந்த மரபுவழி மருத்துவர்கள்
ஆரோக்கியமற்றவர்கள் அல்ல அவர்கள் நமக்கு இருக்கும் வாழும் அகராதிகள்
இன்றைய முதியவர்கள் நேற்றைய இளைஞர்கள்;
இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள்
ப்ரபஞ்சம் ஒரு எரிவளைத்தடு* போன்றது.
நாம் செய்யும் செயல் நம்மை மீண்டும்
வந்து சேரும்- அவை நல்லதாயினும் சரி தீயதாயினும் சரி
அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல – நாம்
அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியவர்கள்
வயது என்பது வெறும் எண் மட்டுமே.
எண்ணத்தில் முதிர்ச்சியும் உள்ளத்தில் இளமையும் கொண்டவர்
எண்பது வயதிலும் அவர் மூப்பர் அல்ல
அவர் எண்பது வயது இளைஞர்
மொத்தத்தில் முதுமை என்பது
மு - முதிர்ச்சியான** எண்ணத்துடன்
து- துன்பங்கள் பல கடந்து வாழ்வின் பாலமாய்
மை- மையப் புள்ளியாய் விளங்கும் பருவம் !!!!!
நன்றி !!!!!!
* சுயாதீனமான - independent
* எரிவளைத்தடு - boomerang
* தகவமைக்கும் - adaptation / adapting
** முதிர்ச்சியான - matured thoughts