வாங்குபவர் மட்டுமின்றி
கொடுப்பவர்க்கும் நிறைவை தந்து
மகிழ்வை கொடுக்கும் ஒன்று
என்னை முதலில் நேசித்த பெண்மணி
என்னை ஈன்ற பொழுதில்
எனக்கு தந்த ஒன்று
சிரிக்க ஆரம்பித்ததும் அன்னையின்
முகத்தை பொக்கைவாய் கொண்டு
எச்சிலில் கரைத்த ஒன்று
குழந்தை பருவத்தில் வீட்டிற்கு வந்த
மாமாவுக்கும் அடுத்த வீட்டு
பெண்ணிற்கும் தந்த ஒன்று.
சிறுவயதில் நாம் கேட்டதை பெற
பெரியவர்கள் தங்களுக்கு அழகிய
விலையாக கேட்ட ஒன்று.
பதின் வயதில் திரையில் கண்டு
உடலில் புதிய ரத்தம்
பாய்ந்தததை உணர்ந்த ஒன்று.
நான் இதயம் பறிகொடுத்த
என்னவளை அருகில் காணும்போது
கொடுக்க துடித்த ஒன்று.
அவள் செவ்விதழ் அசையும்போது
அது அசையாதபடி இதழோடிதழ்
சேர்க்க கொடுத்த ஒன்று.
சோர்வில் வெம்பி வாடும்போது
நம்மை அணைத்து நம்பிக்கை
தரும் வடிவத்தின் ஒன்று.
மணமுடித்து முதல் நாளில்
இணையின் ஸ்பரிசத்தில் காதலின்
உச்சத்தில் பரிமாறும் ஒன்று.
மனைவி தாய்மை அடையும்போது
அதன் பூரிப்பில் உச்சி
முகர்ந்து கொடுக்கும் ஒன்று.
தன்கருவை சுமக்கும் மனைவி
மசக்கையில் உள்ள போது
ஆசுவாசப்படுத்தி தருகின்ற ஒன்று.
ஈரைந்து மாதம் சுமந்து தன்
வாரிசை பெற்றதும் அந்த
பிஞ்சுகைகளில் பதிக்கும் ஒன்று.
பெற்ற மகள் மணமுடித்து
செல்லும்போது கண்ணில் நீர்மல்க
நெற்றியில் இடும் ஒன்று.
மூப்பெய்து தன் இணையுடன்
இதயம் தொட்ட நொடிகளை எண்ணி
வாஞ்சையுடன் பகிரும் ஒன்று.
முத்தம் - முதல் நொடியில்
மொத்தமும் கரையும்
முத்தான தருணம்
No comments:
Post a Comment