Thursday, June 25, 2020

முத்தம்:

வாங்குபவர் மட்டுமின்றி
கொடுப்பவர்க்கும் நிறைவை தந்து
மகிழ்வை கொடுக்கும் ஒன்று

என்னை முதலில் நேசித்த பெண்மணி
என்னை ஈன்ற பொழுதில்
எனக்கு தந்த ஒன்று

சிரிக்க ஆரம்பித்ததும் அன்னையின்
முகத்தை பொக்கைவாய் கொண்டு
எச்சிலில் கரைத்த ஒன்று

குழந்தை பருவத்தில் வீட்டிற்கு வந்த
மாமாவுக்கும் அடுத்த வீட்டு
பெண்ணிற்கும் தந்த ஒன்று.

சிறுவயதில் நாம் கேட்டதை பெற
பெரியவர்கள் தங்களுக்கு அழகிய
விலையாக கேட்ட ஒன்று.

பதின் வயதில் திரையில் கண்டு
உடலில் புதிய ரத்தம்
பாய்ந்தததை உணர்ந்த ஒன்று.

நா‌ன் இதயம் பறிகொடுத்த
என்னவளை அருகில் காணும்போது
கொடுக்க துடித்த ஒன்று.

அவள் செவ்விதழ் அசையும்போது
அது அசையாதபடி இதழோடிதழ்
சேர்க்க கொடுத்த ஒன்று.

சோர்வில் வெம்பி வாடும்போது
நம்மை அணைத்து நம்பிக்கை
தரும் வடிவத்தின் ஒன்று.

மணமுடித்து முதல் நாளில்
இணையின் ஸ்பரிசத்தில் காதலின்
உச்சத்தில் பரிமாறும் ஒன்று.

மனைவி தாய்மை அடையும்போது
அதன் பூரிப்பில் உச்சி
முகர்ந்து கொடுக்கும் ஒன்று.

தன்கருவை சுமக்கும் மனைவி
மசக்கையில் உள்ள போது
ஆசுவாசப்படுத்தி தருகின்ற ஒன்று.

ஈரைந்து மாதம் சுமந்து தன்
வாரிசை பெற்றதும் அந்த
பிஞ்சுகைகளில் பதிக்கும் ஒன்று.

பெற்ற மகள் மணமுடித்து
செல்லும்போது கண்ணில் நீர்மல்க
நெற்றியில் இடும் ஒன்று.

மூப்பெய்து தன் இணையுடன்
இதயம் தொட்ட நொடிகளை எண்ணி
வாஞ்சையுடன் பகிரும் ஒன்று.

முத்தம் - முதல் நொடியில்
மொத்தமும் கரையும்
முத்தான தருணம் 


Tuesday, May 26, 2020

காதலே நீ

வாழ்வில் எது கிடைத்தாலும் 
உன் உறவு மட்டும் போதும். 
உன் தூய அன்பில் நனைந்து இருக்கும் 
அந்த நொடி எப்போதும் வேண்டும். 
தினமும் உன்னிடம் பேசி முடித்த பின்பும்
இன்னும் பேசிட வேண்டி 
என் மனம் தூண்டும்.

காதலே காதலே நீ! 
எந்தன் மூச்சிலும் பேச்சிலும் நீ, 
நீ மட்டுமே !!!

கூரிய விழி பார்வையிலே 
நீ முறைக்கும் போதும்
விழியின் ஓரம் துளிர் விடும் 
உன் துளி புன்னகை வேண்டும் 
உன் பெயரை ஆயிரம் முறை 
சொல்லி முடித்தாலும் 
இன்னும் கோடி முறை 
மனம் கூறிட தூண்டும் 

காதலே காதலே நீ! 
எந்தன் வாழ்விலும் தாழ்விலும் நீ, 
நீ மட்டுமே !!! 

சில நேரம் எந்தன் மனம் 
தொய்வடையும் போதும் 
உன் வார்த்தை கேட்டு மீண்டும் 
எழும் விந்தை அது வேண்டும் 
உந்தன் வார்த்தைகள் கேட்டு 
நான் உலகமே மறக்கும் - அந்த 
நொடி பொழுது 
எப்போதும் வேண்டும் 

காதலே காதலே நீ! 
எந்தன் எண்ணமும் திண்ணமும் நீ, 
நீ மட்டுமே !!! 

வான் வீதியில் நான் நட்சத்திரங்களை
 எப்போது காணும் போதும் 
என் நினைவில் தோன்றும் உந்தன்
சிரிப்பு அது வேண்டும்
என்னிடம் நீயும் கோபம் கொள்ளும் போதும் சில நொடியில் 
அதை மறந்து காட்டும் 
பரிவு அது வேண்டும்

காதலே காதலே நீ! 
என்றும் என் காதலும் வாழ்க்கையும் நீ, 
நீ மட்டுமே! 
காதலே காதலே நீ! 
என்றும் என் உயிரிலும் ஒவ்வொரு அணுவிலும் நீ, 
நீ மட்டுமே!!  

அவள் அழகு



உன் நெத்தியில் இருக்கும் 
வில் போன்ற புருவம் அழகு.
அந்த புருவம் கோவத்தில் 
உயரும் போது மேலும் அழகு...

பார்பவர்களை சுண்டி இழுக்கும் 
உன் மயக்கும் விழிகள் அழகு.
அந்த விழிகளில் கருணை கொஞ்சும்
பார்வை மேலும் அழகு...

உந்தன் சிமிட்டும் இமைகள் அழகு 
அதை அலங்கரிக்கும் உன் கண்மை 
மேலும் அழகு... 
உன் கூறிய நாசி அழகு.
அதில் நீ ஸ்வாசிக்கும் காற்று 
மேலும் அழகு...

உன் தேன்சிந்தும் இதழ்கள் அழகு.
அந்த இதழ்களில் 
 இழையோடும் புன்னகை 
மேலும் அழகு....

உன் கார்மேக அழகிய 
கூந்தல் அழகு.
அதில் சூடியுள்ள மல்லிப்பூ 
மேலும் அழகு....

உன் சங்கு கழுத்து அழகு. 
உன் பின் கழுத்தை முத்தமிட்டு 
அலங்கரிக்கும் தங்க சங்கிலி 
மேலும் அழகு....

நீ கட்டி இருக்கும் சேலை அழகு.
அந்த சேலை படர்ந்து 
இருக்கும் உன் தேகம் 
மேலும் அழகு...

நீ நடக்கும் நடை அழகு
நடக்கும் போது ஓசை இடும் 
உன் கொலுசின் ஓசை 
மேலும் அழகு...

மழை துளி கூட தன் 
நிலை இழக்கும் உன் 
மேனி அழகு.
உன்னை வர்ணிக்கும் போது 
கவிதையும் தோற்று போவது 
மேலும் மேலும் அழகு...



நான் மாறவா???


உன் அழகிய கண்களின் 
சுகம் அறிய 
உன் பார்வையாய் 
நான் மாறவா?.

உன் கூர்மையான விழியை 
என்றும் காக்கும் உன் 
விழி நீராய் 
நான் மாறவா? 

உன் தேன் சொட்டும் 
செவ்விதழை சுவைக்க
உன் நாவாய் 
நான் மாறவா?

உன் சிரிப்பின் சுகம் உணர 
உன் மேல் அமரும் 
பட்டாம் பூச்சியாய் 
நான் மாறவா?

உன் விரல் தீண்டும் சுகம் 
அதை நான் உணர 
உன் கருங்கூந்தலாய் 
நான் மாறவா? 

உன் கூந்தலின் வாசம்
உணர்ந்திட நீ 
சூடும் மலராய் 
நான் மாறவா? 

உன் சங்கு கழுத்தை 
அலங்கரிக்க நீ அணியும் 
உன் நகையாய் 
நான் மாறவா? 

உன் மேனியின் மென்மையை 
நான் உணர்ந்திட உன்னை 
வருடும் காற்றாய் 
நான் மாறவா? 

உன் அழகிய மார்பில் 
நான் சாய்ந்து கொள்ள 
உன் சேயாய் 
நான் மாறவா?

உன் உடலின் ஆபத்தான வளைவுகளை
 நான் கடந்து செல்ல 
நீ உடுத்தும் உன் உடையாய் 
நான் மாறவா? 

உன் தாமரை பாதத்தை 
தாங்கி கொள்ள நீ நடக்கும் 
உன் பாதையாய் 
நான் மாறவா?

சொர்க்கம் அதை அறிந்துகொள்ள 
உன் மடியில் தலை 
சாயும் ஜீவனாய் 
நான் மாறவா? 

நீ என்றும் உயிர் வாழ 
உன் ஸ்வாச காற்றாய் 
நான் மாறவா???


என் சிறுக்கி மவளே


என்னை முறுக்கு ஏற வைத்த 
சிறுக்கி மவளே
உன் வளைவில் சறுக்க வைத்த 
கிறுக்கி மவளே
என் இதய துடிப்பை எகிற வைத்த 
சிறுக்கி மவளே
என் ஆண்மையை ஆட்கொள்ள வந்த 
சிறுக்கி மவளே
உன் பெண்மையின் மேன்மையில் 
என் மனதை திருடிய 
சிறுக்கி மவளே
உன் நினைவில் என்னை வாட்டி எடுக்கும் 
சிறுக்கி மவளே
தனிமையின் தாக்கம் தாங்க மாட்டாமல் 
என்னை தவிக்க விட்ட 
சிறுக்கி மவளே
அருகில் இருந்தும் தொலைவில் சென்ற 
சிறுக்கி மவளே
உன் பார்வையின் கிரக்கத்தில் 
என்னை கிறங்கடித்த 
கிறுக்கி மவளே
என் வாழ்வே நீதானடி 
என் அழகிய
சிறுக்கி மவளே!!!


என்னவளே நீ ஒரு கவிதை


 
நான் உன்னை பற்றி எழுதியது 
ஒற்றை வரி கவிதை
ஆனால் உன் பார்வையில் நீ தந்தாய்
 ஓராயிரம் கவிதை!!!

உன்னை நினைக்காத நொடிகள் 
மிகவும் சொர்ப்பம்.
உன் கூரிய பார்வைக்கு செய்தேன்
என்னை உனக்கு அர்ப்பணம்!!!

உன்னோடு உரையாடிய பொழுது 
என் வாழ்வில் உண்டானது 
வசந்த காலம்.
உன்னை நினைத்து ஏங்கிய போது 
நான் அனுபவித்தது 
தகிக்கும் கோடை காலம்!!!

நினைத்தாலும் உன்னை மறக்காது 
என் நெஞ்சம்.
உன் மேல் உள்ள என் அன்பில் 
என்றும் இருக்காது பஞ்சம்!!!

என் மனம் உன்னிடத்தில் 
கொண்டதடி தஞ்சம்.
உன்னை என்றென்றும் என் மனம்
 காதலால் கொஞ்சும்!!!

உன்னிடம் உரையாடும் நேரம் 
எனக்கு தேவை கொஞ்சம்.
அது கிடைக்காமல் போனால் ஏக்கத்தில் 
என் நெஞ்சம் அஞ்சும்!!!

மழை பொழிந்தால் வாடிய பயிரும்
புத்துயிர் பெற்றிடும்.
நீ இல்லாமல் போனால் என் நெஞ்சில்
ஏற்படும் மாறா வெற்றிடம்!!!

நீ வாழ்வில் வந்ததால் நான் 
பெற்றது புத்துயிர்.
நீ என்னை பிரிந்தால் இந்த 
உடலில் ஏதடி உயிர்!!!


உன் சிறப்பு



உன் கண்ணில் உள்ளது சிரிப்பு.
அது எப்போதும் உனது சிறப்பு..

உன் சிரிப்பில் உள்ளது கனிவு
உன் பேச்சிலும் செயலிலும் உள்ளது பணிவு... 

உன்னை நினைத்து காணுவர்
பலர் கனவு...
ஏக்கத்தில் அவர்களால் உட்கொள்ள
முடியாது உணவு...

உன் கூந்தலுக்கு அழகு 
சேர்க்கும் காந்தள். 
உன்னை காணாது போனால் 
வாழ்வே காந்தல்...

பெயர் சூட்ட தெரியவில்லை 
நம்முள் மூண்ட இந்த உறவு.
நீ இருந்தால் இந்த வாழ்வே 
எனக்கு பெரும் வரவு....

ஊடலும் தவிப்பும்



உன் மௌனத்தையும் 
கண்டு ரசித்த நான்,
உன் தன் மன குழப்பத்தை 
கண்டு வாடுகிறேன்...

உன் கோபத்தை கூட 
சகித்து கொண்ட நான், 
நீ மனச்சுமையுடன் இருப்பதை 
கண்டு உள்ளம் வேகிறேன்..

உன் பேச்சை கேட்டு நித்தம்
உயிர்த்து எழுந்த நான், 
இன்று நீ பேசாமல் இருப்பதை 
எண்ணி என் உயிர் சிதர கண்டேன்...

உன் பார்வை பட்ட மாத்திரத்தில்
மருந்தை உணர்ந்த நான், 
உன்னை காணாது போனதை எண்ணி
 என்னுள் நஞ்சு புகக்கண்டேன்...

உன் ஒற்றை வரி வார்த்தையில் 
வாழ்வின் அர்த்தம் உணர்ந்த நான், 
உன் ஒரு வார்த்தை 
கேட்க எண்ணி தவிக்கிறேன்...

தீயில் வெந்த போதும் 
மருந்தாய் இருந்த உன்னிடம் 
மனம் விட்டு பேச முடியாத நொடி 
ஆயிரம் முறை தீயில் குளிக்கிறேன்...

நா‌ன் என்ன தவறு செய்தாலும் 
என்னை கடிந்து கொள்ள உனக்கு 
அனைத்து உரிமையும் உண்டு. 
ஆனால் மீண்டும் என்னிடம் பழையபடி 
என் அன்பு தோழியாய், 
என் பாச தாயாய், 
என் உயிர் கவசமாய் 
என்னோடு பேசடி 
என் உயிர் காதலியே... 





தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நீ பட்ட துன்பங்கள் யாவும் தூள்தூளாக...

தவறிய வாய்ப்புக்கள் உன்னிடம் மீண்டும் வந்து சேர்ந்திட ...

நீ அடைந்த அனுபவங்கள் உனது ஆசானாக....

நீ கடந்து வந்த பாதைகள் யாவும் 
உன் வாழ்வின் பாடமாக...

சந்தித்த தடைகள் யாவும் நீ தாண்டிச் செல்லும் படிகளாக...

இனி வருங்காலம் அனைத்தும் உன் வாழ்வில் இன்பமாக...

உன் பெருமை சேர்க்கும் பிள்ளைகளால் நீ என்றும் பேரானந்தம் அடைய...

உன் அன்பு கணவருடன் என்றும் நீங்காத காதலுடன்... 

தமிழைப் போல் என்றும் தழைக்கும் மங்காத புகழுடன்...

செயற்கரிய செயல்கள் செய்து நல்ல சேயாக, 
நல்ல சகோதரியாக, மனைவியாக என்றும் நீடூழி வாழ்ந்திட...

இன்று பிறந்த நாள் காணும் என் இனிய தோழிக்கு  மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...



நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


அனைவருக்கும் நீ காட்டியது அன்பு ! 
உன்னிடம் இருப்பது பல உயரிய பண்பு! 
எங்கும் எதிலும் நீ காட்டுவது அர்ப்பணிப்பு! 

எடுத்த செயலில் எப்போதும்
இருப்பது உன்தன் முனைப்பு! 
வெற்றி பெறும் வரை ஓயாது 
உன் இதயத் துடிப்பு! 
இது யாவும் நீ வாழ்வில் 
கற்ற ஒப்பற்ற படிப்பு! 

உன் குடும்பத்திலும் சமூகத்திலும் 
நீ கொண்டுள்ளது 
ஒரு பிணைப்பு!
எங்கும் எப்போதும் நீ பெறுவாய் 
பல நன்மதிப்பு!
எப்போதும் உன் முகத்தில் 
இருப்பது ஒரு 
குழந்தையின் சிரிப்பு!

உன்னை காணும் போது 
உன் இதய தேவதைக்கு 
வருவது காதல் பூரிப்பு!
எதிலும் நீ செயல் புரிவது 
ஆழ்ந்த பகுப்பு! (analysis)
அதனால் நீ பெற்றது பல 
ஞானத்தின் தொகுப்பு!

உனக்கு நாங்கள் கூறுவது 
உன் பிற‌ந்தநா‌ள் வாழ்த்தின் 
அன்பு அறிவிப்பு!!!!!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.!!!

வாழ்க வளமுடன்!!!!!